Wednesday, January 5, 2011

காப்பீடு கட்டாயம்

இன்றைய அவசர உலகில் யாருக்கு எப்போது என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. ஒருவரை நம்பி குடும்பம் இருக்கிறது என்கிற போது அவருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் குடும்பத்துக்கு கை கொடுப்பதுதான் காப்பீடு..!
* ஒருவர் மொத்தம் மூன்று விதமான காப்பீடுகள் எடுப்பது அவசியமாகிறது. அவை ஆயுள், விபத்து, ஆரோக்கிய காப்பீடு என்பதாக இருக்கிறது. வாகனம் வைத்திருப்பவர்கள் கூடுதலாக மோட்டார் பாலிசியும் எடுத்துக் கொள்வது அவசியம்.

ஆயுள் காப்பீடு:
* எவ்வளவு தொகைக்கு ஆயுள் பாலிசி எடுக்க வேண்டும் என்பதில் பலருக்கு குழப்பம் இருக்கிறது. பொதுவாக, ஒருவரின் ஆண்டு சம்பளத்தை போல் 10 மடங்கு தொகைக்கு பாலிசி எடுத்து வேண்டும். உதாரணத்துக்கு ஒருவரின் மாதச் சம்பளம் 20 ஆயிரம் ரூபாய் என்றால் அவரின் ஆண்டு சம்பளம் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய். அவர் 24 லட்ச ரூபாய்க்கு பாலிசி எடுப்பதுதான் சரியாக இருக்கும். 
* குறைந்த பிரீமியத்தில் அதிக கவரேஜ் கிடைக்கும் டேர்ம் பிளான்கள் சிறந்தது.

விபத்து காப்பீடு
* பர்சனல் ஆக்சிடென்ட் பாலிசி என்கிற தனி நபர் பாலிசியை அனைவரும் எடுப்பது அவசியம். இது விபத்து எதிலாவது சிக்கி உயிரிழந்தால் இழப்பீடு வழங்குவதாக இருக்கும். இந்த பாலிசியில் 1 லட்ச ரூபாய் கவரேஜ்&க்கு 100 ரூபாய்தான் பிரீமியம். இதை ஆயுள் காப்பீடு நிறுவனங்களின் பாலிசியுடன் ரைடர் பாலிசி என்ற துணை பாலிசியாக எடுத்துக் கொள்ளலாம். அல்லது பொது காப்பீட்டு (ஜெனரல் இன்ஷூரன்ஸ்) நிறுவனங்களில் தனி பாலிசியாக எடுத்துக் கொள்ளலாம். இந்த பாலிசியில் 1 லட்ச ரூபாய் கவரேஜ்&க்கு 100 ரூபாய்தான் பிரீமியம்.

மெடிக்ளைம்:
* விபத்து அல்லது உடல் நலப் பாதிப்பால் மருத்துவமனையில் சேர்ந்து எடுக்கும் சிகிச்சைக்கான செலவை திரும்பப் பெறுவதாக இந்த பாலிசி இருக்கிறது. மெடிக்ளைம் பாலிசியில் கவரேஜ் இரு பிரிவாக இருக்கிறது. முதல் பிரிவு மருத்துவக் காப்பீடு. இதில், விபத்தில் சிக்கி மருத்துவமனையில் தங்கி எடுத்துக் கொள்ளும் சிகிச்சை மற்றும் அதனை ஒட்டிய செலவுகள் அடங்கும். 
இரண்டாவது பிரிவு, கிரிட்டிக்கல் இல்னஸ் என்கிற தீவிர நோய் பாதிப்புக்கான (புற்றுநோய், சிறுநீரக செயல் 
இழப்பு, உறுப்பு மாற்று சிகிச்சை) செலவுகள் அடங்கும். இந்த இரண்டுக்கும் தனித் தனியாக பிரீமியம் கட்ட வேண்டி வரும்.

வாகன காப்பீடு
* இரு சக்கர வாகனம் அல்லது கார் வைத்திருப்பவர்கள் இந்த பாலிசியை எடுப்பது கட்டாயம். இதில், தேர்ட் பார்ட்டி பாலிசி, (மூன்றாம் நபருக்கு ஏற்படும் பாதிப்புக்கான இழப்பீடு), ஓன் டேமேஜ் (வாகனத்தின் உரிமையாளரே வாகனத்துக்கு சேதம் ஏற்படுத்துவதற்கான இழப்பீடு) என இரு பாலிசிகள் இருக்கின்றன. இதில், தேர்ட் பார்ட்டி பாலிசி சட்டப்படி எடுக்கப்பட வேண்டும். 
பாலிசி எப்படி எடுப்பது?
* உங்களை சுற்றியே ஏராளமான இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்கள் இருப்பார்கள். அவர்களிடம் பாலிசி எடுத்துக் கொள்ளலாம். இல்லை என்றால் அருகிலுள்ள காப்பீடு நிறுவனங்களின் கிளையை அணுகினால் போதும்.
தேவையான ஆவணங்கள்
* லைஃப் இன்ஷூரன்ஸ், விபத்து, மெடிக்ளைம் பாலிசி எடுக்க & வயதுக்கான ஆதாரம் (பள்ளி, கல்லூரி சான்றிதழ், பாஸ் போர்ட் போன்றவை), அதிக தொகைக்கு பாலிசி எடுக்கும் போது புகைப்படம் மற்றும் வருமானத்துக்கான ஆதாரம் தேவைப்படும்.
* மோட்டார் இன்ஷூரன்ஸ் எடுக்க ஆர்.சி புத்தகத்தின் நகல், அடையாளம் மற்றும் முகவரிக்கான ஆதாரம்

யார் பெயரில் பாலிசி?

காப்பீடு என்பது சம்பாதிக்கும் நபருக்குதான் எடுக்க வேண்டும். பலர் தங்கள் பெயரில் குறைவான தொகைக்கும் மனைவி பெயரில் அதிக தொகைக்கும் பாலிசி எடுக்கிறார்கள். பாசத்தை மனைவி மீது வையுங்கள். பாலிசியை உங்கள் பெயரில் வையுங்கள். உதாரணத்துக்கு ஒருவர் தன் பெயரில் 2 லட்ச ரூபாய்க்கும், மனைவி பெயரில் 5 லட்ச ரூபாய்க்கும் பாலிசி எடுத்திருந்தார் என்று வைத்துக் கொள்வோம். திடீர் விபத்தில் கணவர் மேலே போய் சேர்ந்துவிட, குடும்பத்துக்கு 2 லட்ச ரூபாய்தான் இழப்பீடு கிடைக்கும். அதிக தொகைக்கு கணவர்தன் பெயரில் எடுத்திருந்தால் கூடுதல் தொகை குடும்பத்துக்கு கிடைத்திருக்கும். அதே நேரத்தில், பணிபுரியும் மனைவியாக இருந்தால் அவர் பெயரில் தனியாக பாலிசி எடுப்பது மிகஅவசியம்.

வரி சேமிக்க சூப்பர் திட்டங்கள்..!

வரி சேமிக்க சூப்பர் திட்டங்கள்

வரி சேமிக்க சூப்பர் திட்டங்கள்..!


‘‘மாதச் சம்பளக்காரர்களில் பெரும்பாலோர், கடைசி மூன்று மாதத்துலதான் வருமான வரிச் சேமிப்பு பற்றியே யோசிக்கிறார்கள்’’ என்கிறார்கள் முன்னணி ஆடிட்டர்கள். 
உண்மைதான். லைஃப் இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்களும் மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்ட்களும் ஜனவரி முதல் மார்ச் வரையில் பிஸியாக இருப்பதை வைத்தே அந்த முடிவை எடுத்துவிடலாம். 

நடப்பு 2010&11&ம் நிதி ஆண்டில் வருமான வரியை மிச்சப்படுத்த பல வழிகள் இருக்கின்றன. 

வரி மிச்சம் என்றவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வருவது 80&சி பிரிவுதான். தற்போதைய நிலவரப்படி இப்பிரிவில் அதிகபட்சம் ஒரு லட்ச ரூபாய்க்கு வரிச் சலுகை பெற முடியும்.

80 சி பிரிவு & முதலீடுகள்

* பணியார் பிராவிடன்ட் ஃபண்ட் (இ.பி.எஃப்)
தனியார் நிறுவனங்களில் பணியாளரின் அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படியில் 12 சதவிகிதம் சம்பளத்தில் பிடிக்கப்படுகிறது. இந்த தொகை மற்றும் அதன் மூலமான வட்டி வருமானத்துக்கு வரி இல்லை. தற்போதைய நிலையில் 9.5% ஆண்டுக்கு வட்டி கொடுக்கப்படுகிறது. 
ஃபிக்ஸட் டெபாசிட் அளவுக்கு வட்டி கிடைப்பதால், விரும்ப திட்டத்தின் கீழ் கூடுதலாக 12 சதவிகித முதலீட்டை மேற்கொண்டு வரலாம். 
முற்றிலும் பாதுகாப்பான முதலீடு. ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கு ஏற்றது.

* பொது பிராவிடன்ட் ஃபண்ட் (பி.பி.எஃப்)
இந்தத் திட்டத்தில் யார் வேண்டுமானாலும் முதலீடு செய்து வரிச் சலுகை பெறலாம். ஆண்டுக்கு குறைந்தபட்சம் 500 ரூபாய் கூட முதலீடு செய்யலாம். ஓராண்டில் அதிகப்பட்சம் ரூ. 70,000 வரையிலான முதலீட்டுக்குதான் வரிச் சலுகை கிடைக்கும். இதுவும் முற்றிலும் பாதுகாப்பான முதலீடு
முதலீட்டு காலம் 15 ஆண்டுகள் என்பதும் ஃபிக்ஸட் டெபாசிட்டை விட வட்டி (8%தான்) குறைவு என்பதும் பாதகமான அம்சமாக இருக்கின்றன. அதே நேரத்தில், நிரந்தரப் பணியில் இல்லாதவர்கள் மற்றும் சுய தொழில் செய்பவர்களுக்கு ஓய்வு காலத்துக்கான சிறந்த சேமிப்பு திட்டங்களில் ஒன்று. 

* ஃபிக்ஸட் டெபாசிட்
ஐந்தாண்டு லாக் இன் பிரீயட் கொண்ட ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டுக்கு வரிச் சலுகை இருக்கிறது. குறைந்தபட்ச முதலீடு 1,000 ரூபாய். வட்டி 8.25&5%. மூத்த குடிமக்களுக்கு 0.25&0.5% கூடுதல் வட்டி.
குறைந்த லாக் இன் பிரீயட் சிறப்பு அம்சமாக இருக்கிறது. அதே நேரத்தில், வருமானத்துக்கு வரி கட்ட வேண்டும் என்பது பாதக அம்சம். மூத்தக் குடிமக்கள் மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு ஏற்றதாக இந்த முதலீடு இருக்கிறது.

* பணப் பலன் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசிகள்
எண்டோவ்மென்ட், யூலிப் பாலிசிகளுக்கு கட்டப்படும் பிரீமியம் மற்றும் ஆதாயத்துக்கு வரி இல்லை. எண்டோவ்மென்ட் பாலிசியில் பிரீமியத்தின் ஒரு பகுதி, இன்ஷூரன்ஸ் கவரேஜ்க்கும் எடுத்துக் கொள்ளப்படுவதால் மொத்தத்தில் சுமார் 5&6% வருமானம் கிடைத்தாலே பெரிய விஷயம். 
யூலிப் பாலிசிகளை பொருத்த வரையில், 2010 செப்டம்பருக்கு பிறகு ஐ.ஆர்.டி.ஏ பல அதிரடி மாற்றங்களை முதலீட்டாளர்களுக்கு சாதகமாக மேற்கொண்டிருக்கிறது. ஏஜென்ட்களுக்கான கமிஷன் கணிசமாக குறைப்பு, லைஃப் கவரேஜ் அதிகரிப்பு, சரண்டர் கட்டணம் குறைப்பு போன்றவற்றால் யூலிப் முன்னை விட சிறந்ததாக மாற்றப்பட்டிருக்கிறது. 
பாலிசி தொகையில் பிரீமியம் 20%&க்கு மேல் இருந்தால் வரிச் சலுகை இல்லை. எனவே, ஒற்றை பிரீமியத் திட்டத்தை தேர்ந்தெடுக்கும் போது, முழு பிரீமியத்துக்கும் வரிச் சலுகை கிடைப்பது போல் கவனியுங்கள். 


* தேசிய சேமிப்பு பத்திரங்கள் (என்.எஸ்.சி)
மத்திய அரசின் இந்தப் சேமிப்பு பத்திரத்தில் செய்யப்படும் முதலீட்டு வரிச் சலுகை இருக்கிறது. வட்டி ஆண்டுக்கு 8% கிடைக்கும். இது ஆறு ஆண்டு திட்டம். 
பாதுகாப்பான முதலீடு. அதே நேரத்தில், வட்டிக்கு வரி இருக்கிறது. ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் மற்றும் குறைந்த வருவாய் பிரிவினர் இதில் முதலீடு செய்யலாம்..!

* பென்சன் திட்டங்கள்
ஆயுள் காப்பீடு நிறுவனங்கள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் கொண்டுள்ள பென்சன் திட்டங்களின் முதலீட்டுக்கு வரிச் சலுகை இருக்கிறது. மத்திய அரசின் புதிய பென்சன் திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டுக்கு இந்த வரிச் சலுகை உண்டு. இந்தத் திட்டங்களில் நிபந்தனைக்கு உட்பட்டு முதிர்வு தொகைக்கு (33%&க்கு வரி இல்லை) வரி கட்ட வேண்டும். பென்சன் தொகைக்கு வரி உண்டு என்பது பாதகமான அம்சம்.
பி.எஃப். திட்ட சேரும் வசதியில்லாத சுய தொழில் செய்பவர்கள் மற்றும் கூடுதல் பென்சன் தேவை என்று திட்டமிடுபவர்களுக்கு..!

* தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள்
மூத்த குடி மக்கள் சேமிப்பு திட்டம், (9%, 5 ஆண்டு), தபால் அலுவலக டைம் டெபாசிட் (7.5%, 5 ஆண்டு) போன்றவற்றுக்கும் வரிச் சலுகை உண்டு.

* இ.எல்.எஸ்.எஸ்
பங்கு சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு வரி விலக்கு இருக்கிறது. 
மாதம் தோறும் குறைந்தது 500 ரூபாய் கூட இதில் முதலீடு செய்யும் வசதி இருக்கிறது. இதில், வருமானம் என்பது பங்கு சந்தையில் செயல்பாட்டை பொறுத்திருக்கிறது. 
மூன்றாண்டு கால லாக் இன் பிரீயட், டிவிடெண்டு, வருமானத்துக்கு வரி இல்லை போன்றவை சாதகமான அம்சங்கள். நீண்ட காலத்தில் ரிஸ்க் எடுக்க தயாராக இருப்பவர்கள் ஏற்றது இது..!

* பங்கு முதலீடு..!
நாட்டின் அடிப்படை கட்டமைப்பு வசதியை மேம்படுத்தும் நிறுவனங்களின் பங்குகளை ஐ.பி.ஓ. போது பங்குகளை வாங்கினால், அதற்கும் வரிச் சலுகை இருக்கிறது. இதை மூன்றாண்டுகளுக்கு விற்க முடியாது. டிவிடெண்ட்க்கு வரி கிடையாது. 
80 சி & செலவு
* டேர்ம் இன்ஷூரன்ஸ் 
இந்த ஆயுள் காப்பீடு பாலிசியில் பிரீமியம் குறைவாக இருக்கும். இடையில் அசம்பாவிதம் ஏதாவது நடந்தால் மட்டும் இழப்பீடு கிடைக்கும். முதிர்வு தொகை எதுவும் கிடையாது. பிரீமியத்து வரிச் சலுகை உண்டு. 
* வீட்டுக் கடன் அசலை திரும்பச் செலுத்துதல்
குடியிருப்பு வசதிக்காக வாங்கிய வீட்டுக் கடனில் திரும்பச் செலுத்தும் அசலுக்கு வரிச் சலுகை இருக்கிறது.
* கல்விக் கட்டணம்
அங்கீகரிக்கப்பட்ட பள்ளிக் கூடம் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மகன்/மகளுக்கான கல்விக் கட்டணத்துக்கும் வரிச் சலுகை இருக்கிறது. இரு பிள்ளைகளுக்குதான் சலுகை உண்டு. 
மேற்கண்ட அனைத்து முதலீடு மற்றும் செலவு எல்லாம் சேர்த்து ஓர் நிதி ஆண்டில் அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மட்டுமே வரிச் சலுகை உண்டு.

இதர முதலீடுகள்:

* உள்கட்டமைப்பு பாண்ட்கள்
இன்ஃப்ராஸ்ரக்சர் பாண்ட்களில் ரூ. 20,000 வரை செய்யப்படும் முதலீட்டுக்கு வரிச் சலுகை இருக்கிறது. வட்டி சுமார் 8%. வருமானத்துக்கு வரி கட்ட வேண்டி வரும். ஐந்தாண்டு திட்டம். 

இதர செலவுகள்
வீட்டு வாடகை & 10 (13 ஏ)
குடியிருக்கும் வீட்டுக்கு கொடுக்கும் வாடகைக்கு வரி விலக்கு இருக்கிறது. மொத்த சம்பளத்தில் 10%&க்கு மேல் வாடகையாக கொடுத்திருக்க வேண்டும். மேலும், வசிக்கும் நகரம், பணியாளர் பெறும் வீட்டு வாடகை படி ஆகியவற்றை பொறுத்து கழிவு இருக்கிறது. வீட்டு உரிமையாளரிடமிருந்து ரசீது பெறுவதும், அவரின் பான் எண்ணை குறிப்பிடுவதும் அவசியம்.

* 80 டி& மருத்துவக் காப்பீடு
மெடிக்கிளையம் பாலிசிக்கு கட்டும் பிரீமியத்தில் ஆண்டுக்கு ரூ 15,000 (மூத்த குடிமக்களுக்கு ரூ 20,000) வரை வரி வரி விலக்கு இருக்கிறது. பெற்றோருக்கு கட்டும் பிரீமியத்துக்கும் வரிச் சலுகை பெற முடியும். இந்த வகையில் ரூ. 35,000&40,000&க்கு வரிச் சலுகை பெற முடியும். 

* 80 யூ& உடல் ஊனமுற்றவர்கள் 
வரி கட்டுபவர் ஊனமுற்றவராக இருந்தால், ரூ. 50,000 (தீவிரமான உடல் ஊனம் ரூ. 1,00,000 ரூபாய்) வரிச் சலுகை இருக்கிறது. 

* 80 டி.டி& மருத்துவச் சிகிச்சைக்கான செலவு
வரி கட்டுபவரை சார்ந்திருக்கும் செயல்பட முடியாத அளவுக்கு ஊனமுற்றவர்களுக்கு மேற்கொள்ளப்படும் மருத்துவமனை செலவில் ரூ 50,000 (தீவிர பாதிப்புக்கு ரூ. 1,00,000) வரை வருமான வரி விலக்கு இருக்கிறது. மருத்துவ அதிகாரியின் சான்றிதழ் அவசியம்.

* 80 டி.டி.பி & தீவிர நோய்களுக்கான சிகிச்சை
கேன்சர், எய்ட்ஸ், நரம்பு மண்டல பிரச்னை உள்ளிட்ட தீவிர நோய்களுக்கு செய்யப்படும் மருத்துவ செலவில் அதிகபட்சம் ரூ. 40,000 ( மூத்த குடிமக்களுக்கு ரூ. 60,000) வரி விலக்கு உள்ளது. மருத்துவ அதிகாரியின் சான்றிதழ் தேவை.

* 80 இ கல்விக் கடன் & 
வரிகட்டுபவர் தன் உயர் கல்விக்காக வாங்கும் கடனுக்கான வட்டிக்கு வரிச் சலுகை இருக்கிறது. 8 ஆண்டுகளுக்கு மட்டுமே வரிச் சலுகை. அசலுக்கு வரிச் சலுகை கிடையாது.

* 24 பிரிவு --& வீட்டுக் கடனுக்கான வட்டி
வீட்டுக் கடனை திரும்பச் செலுத்துவதில், வட்டியில் ஒரு நிதி ஆண்டில் ரூ 1.5 லட்சம் வரை வரிச் சலுகை உண்டு.
வரிச் சேமிப்புக்காக முதலீடு செய்வது முக்கியம்..! அதே நேரத்தில், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் போதுமான அளவுக்கு லைஃப் மற்றும் மெடிக்க்ளைம் பாலிசிகள் எடுத்தது போக மீதமுள்ள தொகையை மட்டுமே முதலீடு செய்யுங்கள். அப்போது தேவையை பொறுத்து முதலீட்டு காலத்தை, அதாவது லாக் இன் பிரீயட்டை கவனியுங்கள். கூடவே எவ்வளவு வருமானம், வருமானத்துக்கும் வரிச் சலுகை இருக்கிறதா என்பதை பாருங்கள்.
& சி.சரவணன்

சூப்பர் டிபஸ்கள்

* இன்ஷூரன்ஸூக்கு டேர்ம் பிளானை எடுத்து விட்டு மீதித் தொகையை இதர வரிச் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வது லாபமாக இருக்கும்.

* துணைவி/துணைவருடன் சேர்ந்து கூட்டாக கடன் வாங்கி, தனித் தனியாக வரி விலக்கு கோரினால் கூடுதல் வரியை மிச்சப்படுத்த முடியும்.

* கணவன் மனைவி இருவரும் வேலை பார்க்கும் போது, இரு பிள்ளைகள் என்றால் ஒருவருக்கு தந்தையும், இன்னோருவருக்கு தாயும் வரிச் சலுகை பெறலாம். 

பாக்ஸ்
யாருக்கு எவ்வளவு வருமான வரி விலக்கு?*
ஆண்கள்
வருமான வரம்பு ரூ. வரி % 
1.60 லட்சம் வரை இல்லை 
1.60&5 லட்சம் வரை 10 
5&8 லட்சம் வரை 20 
8 லட்சத்துக்கு மேல் 30 

பெண்கள்
வருமான வரம்பு ரூ. வருமான வரி % 
1.90 லட்சம் வரை இல்லை 
1.90&5 லட்சம் வரை 10 
5&8 லட்சம் வரை 20 
8 லட்சத்துக்கு மேல் 30 

மூத்த குடிமக்கள் (65 வயதுக்கு மேல்)
வருமான வரம்பு ரூ. வருமான வரி % 
2.40 லட்சம் வரை இல்லை 
2.40&5 லட்சம் வரை 10 
5&8 லட்சம் வரை 20 
8 லட்சத்துக்கு மேல் 30 

* வரித் தொகைக்கு, கல்வித் தீர்வை 3% உண்டு.